
மதரஸா கல்வியில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்று பல முனைகளில் வந்துக் கொண்டு இருக்கும் குரல்களை, நாம் போகிறபோக்கில் வரும் வார்த்தையாக நாம் கடந்து போய்விட முடியாது…
குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் ஒரு விஷயங்களை இதை பார்க்கவில்லையா? (அ) சிந்திக்கவில்லையா? என்ற பல கேள்விகளோடு அல்லாஹ் நமக்கு கூறுவது, குடும்பயியல், விண்ணியியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல் போன்ற பல இயல்களை நமக்கு தந்து இவைகளை ஆராயவும் கூறுகிறான்.
அப்படி பார்த்தால் அதையெல்லாம் கற்பதும் நமக்கு கடமை என்பதை உணர்த்துகின்றான். ஆனால், நாமாக ஒரு சில பகுதிகளை மார்க்க கல்வியென்று முடிவு செய்து, மற்ற கல்வியை விட்டும் மாணவர்களை புறம்தள்ளி விடுகிறோம். நாம் எடுத்த இந்த தவறான முடிவால் மதரஸா மாணவர்களை உலகத்தில் பல விஷயங்களை விட்டும் தனித்து நிற்க செய்துவிட்டோம்.
ஐந்து அல்லது ஏழு வருடங்களை மாணவர்களின் காலங்களில் நாம் அபகரித்துக்கொள்கிறோம் என்றால்? அவர்கள் கல்லூரியை விட்டு வெளியில் செல்லும்போது அவர்களது வாழ்க்கை சிறக்க உலக விஷயங்களிலும் சிலதை அவர்களுக்கு தெளிவு பெறச்செய்து அனுப்புவது அந்த ஆசிரியர்களின் கடமையல்லவா? காலத்திற்கேற்ப மதரஸாவில் வசதியை கூட்டுவதை போல, அந்த மாணவர்களின் கல்வி அறிவையும் கூட்டுவது ஒரு தரமான கல்லூரிக்கு பாதுகாப்பும்கூட என்பதை ஏன் ஏற்க மறுக்கின்றோம்?
நபியவர்கள் வாழ்விலிருந்து நமக்கு முன்மாதிரிகள்..
நபி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நமக்கு மறுமைக்கான தேவைகளை மட்டும் கற்றுத்தரவில்லை.. மாறாக அனைத்து துறைகளுக்கும் முன் மாதிரியை விட்டுச்சென்றுள்ளார்கள்
குடும்பங்களுக்கு நல்ல தலைவராகவும், ஒரு பிரச்சினை என்றால் நல்ல வக்கீலாகவும் கணக்கியலில் பொருளாதார நிபுணராகவும், பஞ்சாயத்து தலைவராகவும், இப்பொழுது உள்ள காலத்திற்கேற்ப சொல்லவேண்டும் என்று சொன்னால், சட்டமன்ற உருப்பினராகவும், ஒரு மக்களவை உருப்பினராகவும், முதலமைச்சராகவும் வாழ்ந்து காட்டியதை, பல துறைகளுக்கு நாம் அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், இப்பொழுது குரான் கூறும் கல்விகளில் சிலவற்றை எடுத்து, சிலவற்றை புறம்தள்ளியதால் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் மற்றவர்களை எதிர்பார்த்தே இருக்கவேண்டும் என்ற சூழ்நிலையை பெரும்பாலான ஆலிம்களுக்கு ஏற்படுத்திவிட்டோம்.
இதனால் பள்ளிகளில் ஒன்றும் தெரியாத பாமர மக்கள் ( முத்தவள்ளிகள் ) திட்டினால் கூட திட்டு வாங்கிக்கொள்ளும் சூல்நிலையில் ஆலிம்கள் நிலை கேட்ப்பாரற்று உள்ளது. இதை போக்கவேண்டும் என்றால்,, இவ்வுலகிலும் ஆலிம்கள் கண்ணியமாக வாழ கல்வியில் சில மாற்றங்களை கொண்டுவருவது காலத்தின் கட்டாயம் …
அஸ்ரார் அஹ்மத்
No comments:
Post a Comment